தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
களப்பணியாளர்கள்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன், இந்திய மக்களியல் ஆராய்ச்சி மையம் மற்றும் காந்தி கிராம சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பின் போது கருவுறுதல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு-இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து நிலை மற்றும் குறைபாடு, குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் எடை குறியீட்டு எண் (பிஎம்ஐ) கணக்கீடு மற்றும் சுகாதாரம் சார்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
தீவிரம்
அந்தவகையில் மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது தேசிய குடும்ப நல கணக்கெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த பணிகள் அடுத்த மாதம் 20-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட கே.டி.எல்.பகுதியில் நேற்று நடைபெற்ற கணக்கெடுப்புப் பணியில் மடத்துக்குளம் வட்டாரசுகாதார மேற்பார்வையாளர் தாமரைக்கண்ணன்,சுகாதார ஆய்வாளர்பொன்னாண்டவர் , சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.