மலம்பட்டி புனித சவேரியார் ஆலய தேர் பவனி
மலம்பட்டி புனித சவேரியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
விராலிமலை தாலுகா, மலம்பட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 1 மற்றும் 2-ந் தேதி சிறப்பு திருப்பலியும், கலை நிகழ்ச்சிகளுடன் வாண வேடிக்கை, அதிர்வேட்டுகள் முழங்க சப்பர வீதியுலாவும் நடைபெற்றது. நேற்று மதியம் 11.30 மணியளவில் சவேரியார், சம்மணசு, மாதா ஆகிய சொரூபங்கள் பொருத்தப்பட்ட 3 தேர்களின் பவனி நடைபெற்றது. தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று 1 மணியளவில் மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் விராலிமலை, கீரனூர், இலுப்பூர், திருச்சி, மாத்தூர், ஆவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மலம்பட்டி பங்குத்தந்தை மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மாத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.