மலேரியா தின விழிப்புணர்வு
மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மூலம் கீழப்பழுவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மலேரியா காய்ச்சல் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, மலேரியா காய்ச்சலை அனபிலிஸ் வகை பெண் கொசுக்கள் பரப்புகின்றன. இவ்வகை கொசுக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தண்ணீர் தேக்கி வைக்கும் சிமெண்டு தொட்டி போன்ற நன்னீரில் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. எனவே வீட்டில் உள்ள நீர் தேக்கி வைக்கும் இடங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்றார். பின்னர் உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், துணை முதல்வர் மல்லிகேஸ்வரன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.