தடுப்பூசி போட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு
பல்லடம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தடுப்பூசி போட்டனர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த சூரியமூர்த்தி மகன் கபிலன் (வயது 25). இவருடைய மனைவி ஏஞ்சலின் ருபீஸியா (21). இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கபிலன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.
இதனால் அவர் தனது மனைவியுடன் நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கிக்கொண்டு வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு சுஜன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இந்த குழந்தைக்கு ஏற்கனவே முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று 2-வது தடுப்பூசி போட்டனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை இறந்தது
இதைத்தொடர்ந்து நேற்றுகாலை குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் தரப்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலை திருப்பூர் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் 3 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.