வணிக வளாக வியாபாரிகள் போராட்டம்


வணிக வளாக வியாபாரிகள் போராட்டம்
x
சேலம்

தற்காலிக பூ மார்க்கெட்டை மாற்ற வலியுறுத்தி வணிக வளாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

வணிக வளாகம்

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் ஏராளமானவர்கள் துணி, அழகு சாதன பொருட்கள், செல்போன் உள்ளிட்ட கடைகள் வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

இந்த வணிக வளாகத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பலர் நேற்று பழைய பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக பூ மார்க்கெட்டை மாற்ற வலியுறுத்தி அங்கு கூடி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது தற்காலிக பூக்கடைகள் அனைத்தும் நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளது. காலை முதல் இரவு வரை நடைபாதையில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. இதனால் வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க மக்கள் வருவதில்லை. வியாபாரம் பாதிப்படைகிறது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. எனவே தற்காலிக பூ மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கூறினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

பரபரப்பு

இது குறித்து பூ வியாரிகள் கூறும் போது, தற்காலிக பூ மார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கடை வைத்து பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தேர்முட்டி பகுதியில் பூ மார்க்கெட்டிற்கு என தனியாக கட்டிடம் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை. எனவே புதிய பூ மார்க்கெட்டை விரைவில் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்றனர். வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் நேற்று வணிக வளாகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story