மழையால் கட்டு, கட்டாக குப்பையில் கொட்டப்பட்ட மல்லித்தழை
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட கொத்தமல்லித்தழைகள் கட்டு, கட்டாக குப்பையில் கொட்டப்பட்டன.
திடீர் விலை உயர்வு
திருப்பூரில் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அவ்வப்போது அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வரத்து குறைவு காரணமாக மல்லித்தழையின் விலை திடீரென அதிகரித்தது. வழக்கமாக ஒரு கட்டு மல்லித்தழை ரூ.15 முதல் ரூ.25 வரைக்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் ஒரு கட்டு ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மளிகை, காய்கறி கடைகளில் சிறிதளவு மல்லித்தழை இலவசமாக வழங்குவதை பல வியாபாரிகள் நிறுத்தி விட்டனர். பல கடைகளில் மல்லித்தழை எடையளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பல வீட்டு சமையறையில்மழையால் கட்டு, கட்டாக குப்பையில் கொட்டப்பட்ட மல்லித்தழை மல்லித்தழையின் வாசத்தை காணவில்லை.
குப்பைக்கு சென்ற மல்லித்தழை
இப்படிப்பட்ட நிலையில் திருப்பூரில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருவதால் பல்லடம், அவினாசிபாளையம், ஆண்டிபாளையம் மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் மல்லித்தழைகள் மழையில் நனைந்த நிலையில் வருவதால் அவை விரைவில் நாசமடைந்து விடுகின்றன. பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நேற்று வாடிப்போன மல்லித்தழைகள் கட்டு, கட்டாக குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. எப்போதும் வாசனை வீசக்கூடிய மல்லித்தழை துர்நாற்றம் வீசக்கூடிய நிலைக்கு போயுள்ளது. இதேபோல் கடந்த வாரம் ஒரு கட்டு ரூ.60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட மல்லித்தழை நேற்று அடியோடு விலை சரிந்து ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்தால் மல்லித்தழை வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.