மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் 19 ஆயிரம் பேர்- அமைச்சர் கீதாஜீவன் தகவல்


மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய  குழந்தைகள் 19 ஆயிரம் பேர்-  அமைச்சர் கீதாஜீவன் தகவல்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் 19 ஆயிரத்து 487 பேர் இருப்பதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் 19 ஆயிரத்து 487 பேர் இருப்பதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்- நலமான குழந்தைகள் வளமான தமிழகம்' திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட செயலி மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 81 ஆயிரத்து 677 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் 4 ஆயிரத்து 547 பேர், மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள் 14 ஆயிரத்து 940 பேர் இருப்பது தெரியவந்து உள்ளது.

தொடர்ந்து கடுமையான ஊட்டச்சத்து மற்றும் மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி 3 வாரத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 4-வது வாரத்துக்குள் விடுபட்ட குழந்தைகளை பரிசோதனை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்

சிறப்பு முகாம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 854 ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. 23.5.2022 முதல் 31.5.2022 வரை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 525 ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதில், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 308, மருத்துவ பரிசோதனை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 30, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ பரிசோதனை தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 187 ஆகும்.

ஆரம்ப நிலையில்....

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் வேண்டும். இணை உணவு மையத்தில் வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 2 அல்லது 3 முறை ஊட்டசத்து உணவு வழங்கி குழந்தைகள் உண்பதை உறுதி செய்தல் வேண்டும்.

ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகள் உள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் அந்த குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை ஒரு வருடத்துக்கு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை விடுபடாமல் முகாமுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து குழந்தைகள் நல மையங்களிலும் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளின் வருகைக்கு ஏற்ப குழந்தைகள் நல மையங்களின் இருப்பிடத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை விரைவில் நிவர்த்தி செய்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உருவாகிட வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தனலட்சுமி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள், வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார திட்ட உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story