தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம் முறைகேடு


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம் முறைகேடு
x

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம் முறைகேடு

திருப்பூர்

குடிமங்கலம், ஜூலை.26-

குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி வல்லகுண்டாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.14 லட்சம் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், இது தொடர்பாக திட்ட ஒருங்கிணைப்பாளர் மீதுநடவடிக்கை எடுக்க விசாரணை அரசுக்கு அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

முறைகேடு புகார்

குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி வல்லக்குண்டாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் கிராம மக்கள் அரசுக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். வேலைக்கு செல்லாதவர்களை பணி செய்ததாக காட்டி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரிக்க திருப்பூர் மாவட்ட குறை தீர்ப்பாளர் பிரேமலதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதல் கட்டமாக, கொண்டம்பட்டி ஊராட்சி தலைவர், செயலர், திட்ட ஒருங்கிணைப்பாளர், பணித்தள மேற்பார்வையாளர், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கடந்த 3-ந்் தேதி விசாரணை நடத்தினார். விசாரணையில் வேலைக்கே செல்லாத இருவரின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 474 செலுத்தப்பட்டிருந்தது.

நடவடிக்கைக்கு பரிந்துரை

இரண்டாம் கட்ட விசாரணை கடந்த 17-ந் தேதி கொண்டம்பட்டி ஊராட்சியில் நடந்தது. இந்த விசாரணையில் 17 பயனாளிகள் மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் முறைகேடாக பல லட்ச ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியது உறுதி செய்யப்பட்டது. விசாரணை அலுவலர், அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் கொண்டம்பட்டி ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு வராதவர்களின் அட்டையை பயன்படுத்தி, தொடர்ந்து முறைகேடு நடந்துள்ளது.

பணித்தள பொறுப்பாளர் திட்ட விதிகளின்படி பணி செய்யாமல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தன்னிச்சையாக செயல்பட்டு ஆவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் வைக்காமல் விதிகளை மீறியுள்ளார். பணித்தள பொறுப்பாளர் பொய்யான வருகை பதிவு செய்துள்ளார். கொண்டம்பட்டி ஊராட்சியில் 2019-2020- ம் ஆண்டு முதல் தொடர்ந்து முறைகேடு நடந்து வந்துள்ளது.

விசாரணை அடிப்படையில் சம்மந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. பொறுப்புகளை சரிவர செய்யாத ஊராட்சி செயலர், நடவடிக்கை எடுக்க தவறிய ஊராட்சி தலைவர், வட்டார அளவில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை செயல்படுத்தி கண்காணிக்கும் பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒன்றிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்ட 33 தனிநபர் வேலைக்கான அட்டையை நீக்க வேண்டும். அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 68-ஐ திரும்ப பெற்று அரசு நிதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அரசுக்கு விசாரணை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

-----------------


Next Story