பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: அரியலூர் மாவட்ட துணை பதிவாளர் பணியிடை நீக்கம்
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு தொடர்பாக அரியலூர் மாவட்ட துணை பதிவாளர் பணியிடை நீக்கம் செய்து சென்னை பால்வள ஆணையர் உத்தரவிட்டார்.
அரியலூரில் 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பால் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பால் விற்பனை கார்டு மூலம் பெறப்பட்ட ரூ.35 லட்சத்தை வங்கியில் முறையாக செலுத்தாமல் இருந்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அப்போதைய செயலர், கணக்காளர், எழுத்தர் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட பால் வள துணைப்பதிவாளர் பார்த்திபன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில், பால் வள சட்டதிட்டங்களுக்கு மாறாக சில்லறை பால் வினியோகத்தை அதிகமாக செய்ததாக பார்த்திபன் மீதும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து துறைரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்னை பால்வள ஆணையர் சுப்பையன் பார்த்திபனை பணியிடை நீக்கம் செய்தும், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கடலூர் மாவட்ட பால் வள துணைப்பதிவாளர் ஸ்ரீகலா கவனிப்பார் என்றும் உத்தரவிட்டார்.