போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது
திருக்குவளையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செந்தில். இவர் நேற்று முன்தினம் இரவு திருக்குவளை கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வாழக்கரை பகுதியில் ஒரு கார் சேற்றில் சிக்கி நிற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற செந்தில், காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த காரில் வந்த ஹரிஹரன் மகன் விக்னேஷ் (29) என்பவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை செந்தில் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது என் மனைவியை நான் திட்டுகிறேன் உங்களுக்கு என்ன என்று கேட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த விக்னேஷ் அவரை தாக்கியதுடன் அவரது கன்னத்தையும் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செந்தில் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து செந்தில் கொடுத்த புகாரின்பேரில், திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர்.