கங்களாஞ்சேரியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
கங்களாஞ்சேரியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ்சை வைப்பூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 42) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கங்களாஞ்சேரி கடைத்தெரு தபாஸ் அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கங்களாஞ்சேரி புளியந்தோப்பு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் விஜய் (வயது 23) என்பவர் பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் கிழே கிடந்த செங்கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் கண்ணாடி துகள்கள் பட்டு பஸ் டிரைவர் திருநாவுக்கரசின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.