விருத்தாசலம் அருகே விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
விருத்தாசலம் அருகே விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்,
விவசாயி
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 60). விவசாயியான இவர் விருத்தாசலம் கடலூர் சாலையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் தர்மராஜன் (47) என்பவரின் மண்டியில் கடந்த 2020-ம் ஆண்டு, 20 மூட்டை வேர்க்கடலை, 65 மூட்டை கம்பு, 100 மூட்டை தினை உள்ளிட்ட தானியங்களை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதற்கு தர்மராஜன் காசோலை வழங்கி உள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் இளங்கோ தர்மராஜனிடம் பணமாக தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
மேலும் இதேபோல், விவசாயிகளான விருத்தாசலம் பெரியார்நகரை சேர்ந்த மாதவனிடம் ரூ.13 லட்சம், பண்ருட்டி மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராம்குமாரிடம் ரூ.16 லட்சம், புவனகிரி தாலுகாவை சேர்ந்த அந்தியாநல்லூரை சேர்ந்த செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம், வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரனிடம் ரூ.4 லட்சம், வேப்பூர் தாலுகா வண்ணாத்தூரை சேர்ந்த பாவாடையிடம் ரூ.1 லட்சம் என சுமார் ரூ.50 லட்சத்திற்கு தானியங்களை தர்மராஜன் கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை அவர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
கைது
இந்த நிலையில் விவசாயிகளான இளங்கோ, மாதவன், ராம்குமார் உள்ளிட்ட 7 பேரும் தர்மராஜனிடம் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் அனைவரையும் ஆபாசமாக திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.