மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் கைது


மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் கைது
x

ரஷியாவில் படிக்கும் 40 மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் இந்திய பணத்தை ரூபிளாக மாற்றி தறுவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 47). இவரது மகள் மஞ்சுதர்ஷினி. இவர் ரஷியாவில் சிம்பெர்போல் பகுதியில் உள்ள கிரீமியா ஸ்டேட் மெடிக்கல் அகாடமி பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக சென்றபோது ரஷியா- உக்ரைன் போரால் அங்கு ரஷியாவின் ரூபிள் பணத்தை மாற்றி கொடுப்பதற்கான 'ஸ்விப்ட்' வேலை செய்யாததால் கல்லூரியில் பணத்தை கட்ட முடியவில்லை.

பணத்தை ரூபிளாக மாற்றி தருவதாக கூறி

இதையடுத்து அதே கல்லூரியில் 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கவியரசு என்ற மாணவர் மஞ்சுதர்ஷினியிடம் இந்திய பணத்தை ரூபிளாக மாற்றி தரும் ஏஜென்ட் ஒருவர் எனக்கு தெரியும் அவர் மூலமாக இந்திய பணத்தை ரூபிளாக மாற்றி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். இதையடுத்து மஞ்சுதர்ஷினி ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை மாணவர் கவியரசு மூலமாக சென்னை போரூர் அடுத்த மாங்காடு, புத்தூர், எஸ்.எஸ்.ஆர் அவென்யூவில் வசிக்கும் குழந்தை அந்தோணி ராஜா (வயது 43) என்பவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்.

தலைமறைவு

ஆனால் அந்த பணத்தை ரூபிளாக மாற்றி அனுப்பவில்லை. இதையடுத்து மஞ்சுதர்ஷினி கவியரசுவிடம் கேட்டுள்ளார். அப்பொழுது கவியரசு எல்லா பணமும் குழந்தை அந்தோணி ராஜாவிடம் இருப்பதாக கூறினார். இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட போது உரிய பதில் அளிக்காமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுதர்ஷினி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து மஞ்சுதர்ஷினியின் தாயார் ராணி இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ரூ.1½ கோடி மோசடி

அதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குழந்தை அந்தோணி ராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது மாணவி மஞ்சுதர்ஷினிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதேபோல் கவியரசு உதவியுடன் குழந்தை அந்தோணி ராஜா தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கல்லூரியில் தங்கி படித்து வரும் சுமார் 40 மாணவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் குழந்தை அந்தோணி ராஜாவை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story