டாஸ்மாக் பார் மேற்பார்வையாளரிடம் பணம் பறித்தவர் கைது
கோவையில் டாஸ்மாக் பார் மேற்பார்வையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் முனியசாமி (வயது 33). இவர் கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் முனியசாமி காய்கறி வாங்குவதற்காக சாரதா மில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் முனியசாமியிடம் மது பாட்டில் வாங்க பணம் கேட்டார்.
அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி முனியசாமியிடம் இருத்த ரூ.200-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்திமுனையில் பணம் பறித்தது சாரதா மில் ரோட்டை சேர்ந்த டிரைவர் பிரசாந்த் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.