மருத்துவ படிப்புக்கு 'சீட்' வாங்கி தருவதாக ரூ.63½ லட்சம் மோசடி செய்தவர் கைது


மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக ரூ.63½ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

மருத்துவ படிப்புக்கு ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.63½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி,

சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கல் சின்ன கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 49). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம். இவர், வெளிநாட்டில் மெக்கானிக்காக வேலை செய்து விட்டு தற்போது வீட்டில் இருக்கிறார்.

இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதுபற்றி தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் கூறினார். அவர், தனக்கு அறிமுகமான தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த காமையா கவுண்டன்பட்டியை சேர்ந்த முருகன் (63) என்பவரிடம் டாக்டர் 'சீட்' வாங்கி தரும்படி கேட்டார்.

ரூ.63½ லட்சம் மோசடி

அதற்கு முருகன், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் டாக்டர் படிப்புக்கு 'சீட்'் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக முருகனிடம் நேரடியாகவும், அவரது வங்கி கணக்கிலும் ரூ.63 லட்சத்து 44 ஆயிரம் வரை கதிரவன் கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட முருகன், சொன்னபடி மருத்துவ படிப்புக்கு 'சீட்' வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதுகுறித்து கதிரவன் பலமுறை கேட்டும் எவ்வித பதிலும் கூறாமல் ஏமாற்றி வந்ததால் மனமுடைந்த கதிரவன், இந்த மோசடி குறித்து ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இதையடுத்து மருத்துவ படிப்புக்கு 'சீட்' வாங்கி தருவதாக மோசடி செய்த முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story