அரசு பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவர் கைது
அரசு பள்ளி ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் காரைக்காலில் இருந்து-கோவை செல்லும் தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவருடன் பஸ்சில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்றார். பின்னர் பஸ் ஏற நடந்து வந்தபோது, ஆசிரியையை பின்தொடர்ந்து வந்த ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். உடனே ஆசிரியை சத்தம் போடவே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ரமேஷ் ஆகியோர் அந்த நபரை விரட்டிச்சென்று கையும் களவுமாக பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், திருச்சியை சேர்ந்த நித்தியானந்தன் (வயது 39) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலியை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை விரட்டிப்பிடித்த போலீஸ் ஏட்டுவை போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா நேரில் அழைத்து பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.