பெண்ணிடம் 9 பவுன் நகை- 2 செல்போன்கள் திருடியவர் கைது
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை-செல்போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 2 மணி நேரத்தில் திருடனை பிடித்த தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்.
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 9 பவுன் நகை-செல்போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 2 மணி நேரத்தில் திருடனை பிடித்த தனிப்படை போலீசாரை சூப்பிரண்டு பாராட்டினார்.
கைப்பை திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ராதாநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவருடைய மனைவி மைதிலி (வயது62). இவர் நேற்று காலை மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் தான் கொண்டு வந்த கைப்பையை கிழே வைத்து விட்டு தலையில் பூவைத்துள்ளார். இதை கவனித்த மர்ம நபர் ஒருவர் அந்த கைப்பையை திருடி சென்று விட்டார்.
9 பவுன் நகை, செல்போன்கள்
தனது கைப்பை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மைதிலி, மயிலாடுதுறை பஸ் நிலைய வாசலில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது கைப்பையில் 9 பவுன் நகைகள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் வைத்திருந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தனிப்படை போலீசார், விரைந்து வந்து பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மைதிலியின் கைப்பையை திருடிய நபர் சீர்காழி பஸ்சில் ஏறி சென்றது பதிவாகி இருந்தது.
திருடனை பிடித்த போலீசார்
பின்னர் மைதிலியின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்போது சீர்காழியில் இருப்பது போன்று காட்டியது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சீர்காழிக்கு சென்று பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து கொண்டிருந்த திருடனை பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயத் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் (42) என்பதும், மைதிலியிடம் கைப்பையை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
சூப்பிரண்டு பாராட்டு
இதையடுத்து தனிப்படை போலீசார் சாமிநாதனையும், மைதிலியிடம் இருந்து திருடி 9 பவுன் நகை, 2 செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தையும் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.
நாகை, செல்போன்கள், பணம் ஆகியவை திருட்டுப்போன 2 மணி நேரத்தில் திருடனை கைது செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸ் ஏட்டுக்கள் நரசிம்ம பாரதி, அசோக் மற்றும் போலீசார் கார்த்தி, செந்தில் ஆகியோர் அடங்கிய தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாராட்டினார்.