பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது
ராமநாதபுரம் வாரச்சந்தையில் பெண்ணிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா கண்ணார்பட்டி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி சேதுலெட்சுமி (வயது 38). இவர் ராமநாதபுரத்தில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு வந்து காய்கறி வியாபாரம் செய்து செல்வது வழக்கம். இவ்வாறு நேற்று முன்தினம் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவரிடம் ஒருவர் வந்து காய்கறி விலை கேட்பது போல் விசாரித்துள்ளார். சேதுலெட்சுமி விலை கூறிக்கொண்டிருந்தபோது மர்ம நபர் நைசாக அவர் வைத்திருந்த செல்போனை தூக்கிகொண்டு தப்பி ஓட முயன்றார்.செல்போனை எடுத்துக்கொண்டு ஓடுவதை கண்ட சேதுலெட்சுமி கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது மர்ம நபர் பரமக்குடி அருகே உள்ள துரத்தியேந்தலை சேர்ந்த ஆண்டி மகன் முனியசாமி (38) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.