விவசாயியிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை திருடியவர் கைது


விவசாயியிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை திருடியவர் கைது
x

அன்னவாசலில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தபோது விவசாயியிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் பணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயி. இவர் கடந்த மாதம் பரம்பூரில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்தும், தனது வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் தான் எடுத்த பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு வெளிேய வந்தார். பின்னர் பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை காணவில்லை. இதையடுத்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து பார்த்தும் பையை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் மர்ம நபர்கள் அங்கிருந்து செல்வது பதிவாகியிருந்தது. வங்கியில் பணம் எடுப்பதை நோட்டமிட்ட அந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றிருக்கலாம் என தெரிய வந்தது.

இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் கேமராவில் பதிவான காட்சிகளுடன் புகார் அளித்தார்.

திருச்சியை சேர்ந்தவர் கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு உத்தரவின் பேரில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தியதில் விவசாயியிடம் பணத்தை திருடி சென்றது திருச்சி திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த கோபி (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோபியை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story