அரசு ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது
கோவை அரசு ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை அரசு ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
இளநிலை உதவியாளர்
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 54). இவர், கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் தற்போது கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.
கோவையை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து எனது சொத்துக்கள் மற்றும் பணிபதிவேடு விபரங்களை கேட்டுள்ளார்.
மேலும் எனது பதிவேடு குறித்த தகவல்களை அனுமதி இன்றி புகைப்படம் எடுத்து சென்றார். பின்னர் நான் பணிக்கு சேர்ந்த சில ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியதாக தவறான தகவல் பரப்பி உள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
ஆனால் நான் அந்த அபார்ட்மெண்ட் வீட்டை அரசு பணியில் சேர்வதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டே வாங்கி விட்டேன். இந்த நிலையில், நானும், எனது நண்பர் ராஜேந்திரன் என்பவரும் கடந்த 23.6.23 அன்று ஆர்.எஸ்.புரம் சென்று ஜெய்சங்கரை சந்தித்து இது குறித்து கேட்டோம்.
அப்போது அவர் தன்னை பத்திரிக்கையாளர் என்றும், தனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் தொடர்ந்து தகவல் பரப்புவேன் என்று மிரட்டினார். இது குறித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய ஜெய்சங்கரை கைது செய்தனர்.