அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு
தஞ்சை அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் திருமணமான 2 மாதங்களில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
தஞ்சை அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் திருமணமான 2 மாதங்களில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
புதுமாப்பிள்ளை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காட்டாகல்படுகை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ். இவருடைய மகன் சகாயசரண்ராஜ்(வயது 33). என்ஜினீயர். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை சகாயசரண்ராஜ் தனது மனைவியின் சகோதரரான சுதாகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை நிமித்தமாக திருச்சிக்கு சென்றார். பின்னர் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் பிரிவு சாலை அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது முன்னால் காரைக்கால் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த பிரபாகரன் (48) என்பவர் ஓட்டிச்சென்றார்.
வல்லம் பிரிவு சாலை முதலை முத்துவாரி பாலம் அருகே வல்லம் ஊருக்குள் செல்லும் சாலையில் பஸ் வலது புறமாக திரும்பியது. அப்போது பின்னால் சகாயசரண்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
சக்கரத்தில் சிக்கி பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சகாயசரண்ராஜ் தூக்கி வீசப்பட்டு, பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவருடைய தலையில் பஸ் சக்கரம் ஏறியதில் அவர் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து வந்த சுதாகர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சகாயசரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த சுதாகர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் திருமணமான 2 மாதங்களில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தினால் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 2 மாதங்களிலேயே புது மாப்பிள்ளை விபத்தில் பலியானது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.