13 ஆண்டுகளாக தேடப்பட்டவர் தூத்துக்குடியில் கைது


13 ஆண்டுகளாக தேடப்பட்டவர் தூத்துக்குடியில் கைது
x

கோத்தகிரியில் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார். கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவானார். கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிடிவாரண்டு பிறப்பிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் காளிராஜ் (வயது 47). அவர் கடந்த 2009-ம் ஆண்டு கோத்தகிரி பாப்டிஸ்ட் காலனி பகுதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க நகையை திருடிய வழக்கில் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த காளிராஜ் தலைமறைவானார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து வராமல் இருந்து வந்தார். இதனால் காளிராஜ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் காளிராஜ் தூத்துக்குடி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார்

தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று கடந்த 3 நாட்களாக காளிராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திரேஸ்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த காளிராஜை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோத்தகிரிக்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில்நேற்று கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் காளிராஜை போலீசார் ஆஜர்படுத்தி, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட காளிராஜ் மீது 2018-ம் ஆண்டு தனது சொந்த மாமனாரை கொலை செய்த வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் மற்றும் 6 பிற வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story