தொடர் திருட்டில் தேடப்பட்டவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது


தொடர் திருட்டில் தேடப்பட்டவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 20 Jun 2023 8:00 PM GMT (Updated: 20 Jun 2023 8:00 PM GMT)

தொடர் திருட்டில் தேடப்பட்டு வந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி

தொடர் திருட்டில் தேடப்பட்டு வந்தவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 59). இவர் கடந்த 2014-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் தங்கி இருந்து, அங்குள்ள தைல எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இதற்கிடையே இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து திருட நோட்டமிட்டார். அதன்படி, 2014-ம் ஆண்டு ஊட்டி காந்தல் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, 9 பவுன் நகையை மோகன் திருடி விட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோகனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனிப்படை போலீசார்

இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த மோகன் ஊட்டியில் இருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம், கோத்தகிரி, கொலக்கொம்பை, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் மோகன் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

மேலும் ஜாமீனில் இருந்து தப்பிய மோகன் மீது ஊட்டி கோர்ட்டு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கடந்த 9 வருடங்களாக அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் ஊட்டி ஊரக உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி உத்தரவுபடி, இன்ஸ்பெக்டர் தர்மராஜ் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசார் சேகர், சதாம் உசேன், தாஜுதீன் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்கா பகுதியில் இருந்த மோகனை மீண்டும் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவான மோகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story