முன்விரோதத்தில் கடைகளுக்கு தீ வைத்தவர் கைது
முன்விரோதத்தில் கடைகளுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதல்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது சகோதரர் தேவன். இவர்கள் இருவரும் தனித்தனியாக பழக்கடை நடத்தி வருகின்றனர். தேவனின் பழக்கடைக்கு வெளியே சாலையில் தரணி (38) பூக்கடை வைத்திருந்தார். அவர் வெயிலுக்காக கடைக்கு முன்பாக குடை கட்டுவது வழக்கம். தரணி குடை கட்டுவதால் தன்னுடைய கடைமறைக்கப்படுகிறது என்று தேவன் கூறியதாக தெரிகிறது.
தரணிக்கு ஆதரவாக அவரது உறவினர் வேல்முருகன் என்கிற மூர்த்தி (வயது 40) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தேவன் மற்றும் அவரது அண்ணன் ராமன், மகன் பரத் ஆகியோர் மூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.
தீ வைப்பு
இந்த நிலையில் தேவன் மற்றும் ராமன் இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இரவு ஒரு மணி அளவில் திடீரென தேவனின் பழக்கடையும், ராமனின் பழக்கடையும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை பார்த்தவர்கள் உடனடியாக உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் சம்பவ இடத்திற்கு வந்தார்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள்ளாக ராமன் மற்றும் தேவன் பழக்கடைகள் மட்டுமின்றி அருகே இருந்த மோகன் என்பவரின் காய்கறி கடையும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் மூர்த்தி ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கைது
உத்திரமேரூர் அடுத்த கீழ்பாக்கத்தில் இருந்த மூர்த்தியை போலீசார் பிடித்து விசாரித்தனர்
போலீஸ் விசாரணையில் கடைகளுக்கு தீ வைத்ததை மூர்த்தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து மூர்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் பூக்கடை நடத்தி வந்த தரணியையும் கைது செய்தனர். தீ விபத்து காரணமாக உத்திரமேரூர் பஜார் வீதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புகைமூட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.