கடசோலை அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

கடசோலை அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் அரசால், பள்ளி மேலாண்மை குழு திட்டம் கொண்டுவரப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடசோலை அரசு நடுநிலைப்பள்ளியில் இந்த ஆண்டின் முதல் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவி கலாராணி தலைமை தாங்கினார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவரும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமாகிய ராம்குமார் முன்னிலை வகித்தார். கடசோலை பள்ளியின் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். கூட்டத்தில் இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கபட்டது.
தொடர்ந்து குழந்தைகள் இடைநிற்றல், மாணவர் கற்றல் திறன் வளர்ப்பு, இல்லம் தேடிக் கல்வி கண்காணித்தல், முதல்-அமைச்சர் காலை சிற்றுண்டி உணவு திட்டம், தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆகியன விவாதிக்க பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ரெனிதா பிரபாவதி, மற்றும் 40-க்கும் மேற்பட்ட பெற்றோர் உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேரி ஜெனிபர், ஜீவசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.






