ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
கழுகுமலை அருகே சம்பகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை அருகே உள்ள சம்பகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் சந்திரிகா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஆஷா தொண்டு நிறுவனம் மற்றும் அமேசான் சார்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்களை பஞ்சாயத்து தலைவர் மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் 2022-2023 ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மாணவ மாணவியர்க்கு பஞ்சாயத்து தலைவர் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும், தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையும் வழங்கினர். கூட்டத்தில் ஆஷா தொண்டு நிறுவன பயிற்றுநர் புவனகிருபாதேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.