ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் கரூரை சேர்ந்த மேலாளர் கைது


ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் கரூரை சேர்ந்த மேலாளர் கைது
x

தஞ்சையில் ராகத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய கரூரை சேர்ந்த வாலிபரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி

தஞ்சையில் ராகத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய கரூரை சேர்ந்த வாலிபரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

டிராவல்ஸ் நிறுவனம்

தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். ராகத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் தருவதாக கூறி, மாநிலம் முழுவதும் ஏஜென்டுகள் மூலம் பலரிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்துள்ளார்.

ஒரு பஸ்சுக்கு 16 பேரை முதலீடு செய்ய வைத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை பஸ் பராமரிப்பு, டிரைவர் ஊதியம், உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத்தொகையை சரிபங்காக, 16 பேருக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ரூ.400 கோடிக்கு மேல் மோசடி

இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாப தொகையை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் லாப பணத்தை முறையாக வழங்கியதால், முதலீடு செய்தவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகையை வழங்காமல், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சமாளித்து வந்துள்ளார். ஆனால், பஸ்சுக்காக, வசூல் செய்த பணத்தில் பஸ்களை வாங்காமல், முதலீடு செய்தவர்களின் பணத்தில் ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்து, பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஓட்டல்கள் என்று சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர், நிறுவனத்திற்கு சொந்தமான 136 பஸ்களில், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் கடனில் இருப்பதும் தெரியவந்தது. இச்சமயத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமாலுதீன் இறந்துவிட்டார். இதையடுத்து முதலீடு செய்தவர்கள் கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரஹ்மான், ஹாரிஸ் ஆகியோரிடம், பணத்தை கேட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

அதற்கு, அவர்கள், இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அவரை புதைத்துவிட்டோம், தோண்டி எடுத்து பணத்தை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தினர்.

அதன்பேரில் ரூ.400 கோடி மோசடி செய்ததாக கமாலுதீனின் மனைவி மற்றும் உறவினர்கள், ராகத் டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

மேலாளர் கைது

இதைத்தொடர்ந்து கமாலுதீன் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளை போலீசார் பூட்டி சீல் வைத்தனர். அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

இந்தநிலையில் ராகத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த கரூரை சேர்ந்த வடிவேல் (வயது 36) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ்சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story