நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தற்கொலை


நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.150 கோடி மோசடி தொடர்பாக கைதான தனியார் நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

கோவையில் ரூ.150 கோடி மோசடி தொடர்பாக கைதான தனியார் நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார்.

நிதி நிறுவன இயக்குனர்

கோவை சாய்பாபாகாலனி அருகே ராமலிங்க நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவரும், இவரது மனைவி குணாவதியும் கடந்த 2017-ம் ஆண்டு சாய்பாபாகாலனியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கினர்.

அதன் நிர்வாக இயக்குனராக சதீஸ்குமார் இருந்தார். அந்த நிதி நிறுவனத்தில் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.100 வீதம் 150 நாட்களுக்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 12 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார்.

அதை நம்பி ஏராளமான அவரது நிறுவனத்தில் முதலீடு செய்த னர். அதில் 2018-ம் ஆண்டு கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் முதலீடு செய்தார்.

ஆனால் அவருக்கு கூறியபடி பணம் திரும்ப கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ரூ.150 கோடி மோசடி

விசாரணையில் அந்த தம்பதியினர் ஏராளமானவர்களிடம் ரூ.300 கோடியை முதலீடாக பெற்று, அதில் ரூ.150 கோடியை திருப்பி செலுத்தியதும், ரூ.150 கோடியை மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தனர்.

மேலும் பல கோடிரூபாய் பணம் இருந்த அவர்களின் 3 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விடவும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சதீஷ் குமார், குணாவதி ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான சதீஷ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனதாக தெரிகிறது. சம்பவத்தன்று சதீஷ்குமார் குடிபோதையில் ஒரு நபரிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அவருடைய மனைவி குணாவதியும், அவரது மகளும் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றனர்.

நேற்று முன்தினம் காலையில் குணாவதி எழுந்து பார்த்த போது, சதீஷ்குமார் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story