பெண்கள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும்மணலூர்பேட்டை பேரூராட்சி துணை தலைவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் :கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடி
பெண்கள் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் பேசிவரும் மணலூர்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அருகே உள்ளது மணலூர்பேட்டை பேரூராட்சி. இந்த பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை கொண்டதாகும். பேரூராட்சி தலைவராக ரேவதிஜெய்கணேஷ் உள்ளார். துணைத் தலைவராக தம்பிதுரை என்பவர் உள்ளார். இருவருமே தி.மு.க. வைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் தலைவர், துணைத்தலைவர் போக, 13 பேர் கவுன்சிலர்களாக உள்ளனர். இவர்களில் 3-வது வார்டு கவுன்சிலர் இறந்துவிட்டதால், தற்சமயம் 12 பேர் கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 1, 2, 6,10, 11 மற்றும் 15 வார்டுகளில் பெண் உறுப்பினர்கள் கவுன்சிலர்களாக இருக்கிறார்கள்.
கவுன்சிலர்கள் புகார் மனு
இந்த நிலையில் கவுன்சிலர்கள் மகாலட்சுமி, சரஸ்வதி, சுப்பிரமணி, மணிகண்டன், முருகன் சார்லஸ், கலையரசி, சாந்தா, விஜயலட்சுமி, லோகநாதன், ஜி.சரஸ்வதி மற்றும் ரவிக்குமார் 12 பேரும் கையெழுத்திட்டு புகார் ஒன்றை பேரூராட்சி செயல் அலுவலர் மேகநாதனிடம் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கூட்டத்துக்கு வருவதற்கு அச்சம்
பேரூராட்சியில் மாதம் தோறும் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணைத் தலைவர், கூட்டத்தில் பங்கேற்கும் பெண் கவுன்சிலர்களை இழிவுப்படுத்தும் சொற்களை பயன்படுத்தி பேசி வருகிறார். இந்த நிலை கடந்த 17 மாதங்களாக இருக்கிறது. இத்தனை நாட்களாக அவர் பேசும் கொச்சை சொற்களை பொறுத்துக்கொண்டு வந்தோம். ஆனால் இனியும் எங்களால் பொறுக்க இயலவில்லை. பெண் கவுன்சிலர்கள் மட்டுமின்றி இதர கவுன்சிலர்களையும் அவர் அவ்வாறு பேசி வருகிறார்.
இதனால், மாதாந்திர கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற பெண் கவுன்சிலர்கள் வருவதற்கே அச்சமாக உள்ளது. மேலும் அலுவலக புத்தகங்கள் மற்றும் காசோலைகளை தன்னிச்சையாக எடுத்துச் சென்று, தன் வசம் வைத்துக் கொண்டு பேரூராட்சி செயல் அலுவலரையம் மிரட்டுகிறார்.
தகுதிநீக்கம்
எனவே இதுபோன்ற துணைத்தலைவர் இருக்கும்வரை நாங்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணிக்கின்றோம். மேலும் தரம் தாழ்ந்த முறையில் நடந்து கொள்ளும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவரை தகுதி நீக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
பேரூராட்சி துணைத்தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி இருப்பது, மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.