மணப்பாடு ஆலய திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூரில் மணப்பாடு ஆலயத்திருவிழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் மணப்பாடு ஆலயத்திருவிழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு திருச்சிலுவைநாதர் தேவாலயத்தில் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருநாட்களான 9, 10 மற்றும் 11-ந் திருவிழா நாளை (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி வரை பக்தர்கள் அதிகளவு கலந்து கொள்வார்கள். வருகின்ற பக்தர்களுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயா முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில், பக்தர்கள் அதிக அளவு வரக்கூடிய நாட்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். தெருக்களில் தாழ்வான நிலையில் உள்ள மின்வயர்களை உடனடியாக சரி வேண்டும். மூன்று நாட்களிலும் நாகர்கோவில், மணப்பாடு, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய முக்கிய வழித்தடங்களில் தடையின்றி பஸ்கள் இயக்கப்படும். சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வளாகம் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட மருத்துவ குழு 24 மணி நேரமும் செயல்படும்.
கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடு படுவார்கள். அவசர நிலைமையை சமாளிக்கும் வகையில் 2 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விஜய சுரேஷ்குமார், சாலை ஆய்வாளர் வசந்தி, உடன்குடி மின்ாரிய இளநிலை பொறியாளர் (பொறுப்பு) வேலாயுதம், மெஞ்ஞானபுரம் சுகாதார ஆய்வாளர் சேதுபதி, குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் குருசாமி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உடன்குடி வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம், மணப்பாடு கிராம நிர்வாக அலுவலர் முத்துசங்கர் உள்பட மணப்பாடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.