கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு


கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 11 Jun 2023 6:46 PM GMT)

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

வைகாசி திருவிழா

சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமி ஆட்டத்துடன் விழா நடைபெற்றது. விழாவையொட்டி 8-ம் நாளன்று காலை பால் குட ஊர்வலம் எடுத்து வரும் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சுவாமி சிலை எடுப்பு விழா மற்றும் கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு எஸ்.எஸ்.கோட்டை சியாமுத்துப்பட்டி சியாமுத்து கண்மாயில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. சியாமுத்துகண்மாயில் வாடிவாசல் அமைக்கப்பட்டு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

400-க்கும் மேற்பட்ட காளைகள்

மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. தொடர்ந்து கிராமத்தின் சார்பில் வாடி வாசலுக்கு ஜவுளி எடுத்துவரப்பட்டு கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்து, கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதன்பின்னர் வாடிவாசலில் இருந்த காளைகள் ஒன்றின்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க முயன்றனர்.

பரிசு

அதில் ஒரு சில காளைகளை அடக்கினர். மஞ்சுவிரட்டில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அனைத்திற்கும் கிராமத்தின் சார்பில் அண்டா, வேட்டி, துண்டு போன்ற பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பான மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டு விழாவில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்படுகளை எஸ்.எஸ்.கோட்டை கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள செய்து இருந்தனர்.


Next Story