கொன்னையம்பட்டியில் மஞ்சுவிரட்டு; 7 பேர் காயம்
கொன்னையம்பட்டியில் மஞ்சுவிரட்டு; 7 பேர் காயமடைந்தனர்.
காரையூர் அருகே கொன்னையம்பட்டி அக்காண்டியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 800-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொழுவிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை திரளான மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அடக்கினர். சிறந்த முறையில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், களம் கண்ட காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.