கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு
சிங்கம்புணரி அருகே கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. அனுமதியின்றி போட்டி நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
சிங்கம்புணரி அருகே கோவில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது. அனுமதியின்றி போட்டி நடத்தியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் பாலடி கருப்பர் கோவில் பாலாபிஷேக விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் உள்ள வயல்வெளியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முன்னதாக ஊர் தலைவர், கிராமத்தார்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலில் இருந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு முன்பு உள்ள வாடிவாசலுக்கு ஊர்வலமாக வந்து கோவில் காளைக்கு வேட்டி, துண்டு அணிவித்தும், மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர்.
இதை தொடர்ந்து தொழுவில் இருந்து கோவில் காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் பிற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் திடலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டன.
5 பேர் மீது வழக்கு
இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். மைதானத்தில் சீறி பாய்ந்து ஓடிய காளைகளை மாடு பிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முற்பட்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கொடுங்குன்றம்பட்டி, செல்லியம்பட்டி, கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த மஞ்சுவிரட்டு போட்டி அனுமதி இன்றி நடைபெற்றதாக கூறி 5 பேர் மீது எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.