மண்டபம், எஸ்.மாரியூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


மண்டபம், எஸ்.மாரியூரில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வரும் 24-ந்தேதி மண்டபம், எஸ்.மாரியூர் ஆகிய ஊர்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் வரும் 24-ந்தேதி மண்டபம், எஸ்.மாரியூர் ஆகிய ஊர்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்கள்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 24-ந்தேதி மண்டபம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் கடலாடி அருகே எஸ்.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவப்பிரிவுகளும் பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படும்.

மருத்துவ சிகிச்சைகள்

உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரிழிவு, பல் பரிசோதனை, கொழுப்பு, உப்பு, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, கருப்பைவாய் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, இதய நோய், மனநலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம், தோல் வியாதி, இந்திய மருத்துவம் மற்றும் சித்தா மருத்துவம், தாய்-சேய் நல ஆலோசனை ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. மருந்துகளும் வழங்கப்படும்.

பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தெரிவிக்கப்படாத பரிசோதனை முடிவுகள் வாட்ஸ்-அப் மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும்.

இதனையடுத்து தொற்றுநோய் கண்டறியப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மக்களைத்தேடி மருத்துவம் மூலமாக அவர்கள் வீடு தேடியே மருந்துகள் வழங்கப்படும்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேல்சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story