மண்டபத்தில் இருந்து மனோலி தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்


மண்டபத்தில் இருந்து மனோலி தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்
x

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபத்தில் இருந்து மனோலி தீவுக்கு இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

பனைக்குளம்

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபத்தில் இருந்து மனோலி தீவுக்கு இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்

தென் தமிழக கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசும் எனவும், கடல் சீற்றமாக இருக்கும் என்றும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 2-வது நாளாக பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாடிநோக்கம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனிடையே மன்னார்வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதன் எதிரொலியாக மண்டபம் காந்திநகர் பகுதியில் இருந்து மனோலி தீவு வரையிலும் வனத்துறையின் மூலம் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக 3-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படகு நிறுத்தும் தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வனத்துறை பைபர் படகு கடல் சீற்றத்தின் வேகத்தால் தள்ளாடி வருகின்றது. போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பலர் படகில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதே போல் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலும் இயக்கப்பட்டு வந்த வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, மன்னார்வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் காற்றின் வேகம், கடல் சீற்றம் குறைந்த பின்னர் வழக்கம்போல் மனோலிதீவு மற்றும் குருசடை தீவுக்கும் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story