மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: நாகர்கோவில் தனியார் விடுதியில் போலீசார் விசாரணை


மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: நாகர்கோவில் தனியார் விடுதியில் போலீசார் விசாரணை
x

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் நாகர்கோவிலில் தங்கியிருந்த தனியார் விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கை எடுத்து விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஷாரிகின் செல்போன் பதிவுகளை சோதனை செய்த போது கோவை, மதுரை, நாகர்கோவில் பகுதிகளில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை, மதுரை சென்று விசாரணை நடத்தினர்.

அதன்படி, நாகர்கோவிலில் ஷாரிக் தங்கி இருந்த தனியார் விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை தனியார் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

பிரேம் ராஜ் என்ற பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து 5 நாட்கள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story