மேரக்காய் விலை கடும் வீழ்ச்சி


மேரக்காய் விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-11T00:15:27+05:30)

கூடலூர் பகுதியில் மேரக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் மேரக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.1-க்கு கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேரக்காய் சாகுபடி

கூடலூர் பகுதியில் கோடைகாலத்தில் பாகற்காய், மேரக்காய், அவரை, தட்டைப்பயறு உள்பட பல்வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ மேரக்காய் கொள்முதல் விலை ரூ.7 வரை இருந்தது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

இதற்கிடையில் பனிப்பொழிவு காரணமாக மேரக்காய் கொடிகள் கருக தொடங்கியது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்தனர். மறுபுறம், மேரக்காய் கொள்முதல் விலையும் படிப்படியாக குறைந்தது. அதாவது தற்போது மேரக்காய் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.1 மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ேமலும் சீசன் நேரத்தில் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை தொடர்வதாக புலம்பி வருகின்றனர்.

குறைந்த விலைக்கு கொள்முதல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மேரக்காய் விளைச்சல் கூடலூர் பகுதியில் பரவலாக நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் காலநிலையை கருத்தில் கொண்டு மேரக்காய் பயிரிடப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் நியாயமான விலை கிடைக்க வேண்டும். சமவெளி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் மேரக்காய்கள் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் கூடலூர் பகுதியில் விளைச்சல் பரவலாக உள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகள் மேரக்காய்களுக்கு தேவை இருப்பதில்லை என கூறி கிலோ ரூ.1 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூர் உள்பட பெருநகரங்களில் மேரக்காய்கள் விலை கிலோ ரூ.25-க்கு மேல் விற்கப்படுகிறது. மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே ஊட்டி பகுதியில் மலைக்காய்கறிகளை நீலகிரி மார்க்கெட்டிங் சொசைட்டி மூலம் கொள்முதல் செய்வதுபோல் கூடலூர் பகுதியில் விளையும் காய்கறிகளையும் வெளியிடங்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story