கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்; பொதுமக்கள் கருத்து


கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்; பொதுமக்கள் கருத்து
x

கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.

மருத்துவக் குணம்

நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க விடப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-

கண்காணிக்க வேண்டும்

பெரம்பலூர் தேரடி தெருவை சேர்ந்த மாரி:- தற்போது மாம்பழ சீசன் என்பதால் வழக்கமாக வாங்கும் பழங்களுடன் மாம்பழங்களையும் சேர்த்து வாங்குகிறோம். கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்கப்படலாம் என்று கூறுகின்றனர். அந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். எனவே அந்த மாதிரி செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்கப்படுகிறதா? என்பதனை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். அப்படி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்:- சீசன் தொடங்கிவிட்டதால் தற்போது விதவிதமான சுவை நிறைந்த மாம்பழங்கள் கடைகளில் கிடைக்கும். ஆனால் சமீப காலமாக இயற்கையாக பழுத்த மாம்பழங்களை விட செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்கு வரும் மாம்பழங்கள் அதிகமாக உள்ளன. இது தெரியாமல் அந்த மாம்பழங்களை கடைகளில் வாங்கி வந்து சாப்பிடும் பொதுமக்கள், பல்வேறு உடல் உபாதைகளுக்கும், நோய் தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு பல பிரச்சினைகளை பொதுமக்கள் சந்திக்கின்றனர். எனவே இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

பொதுமக்கள் கடைகளுக்கு சென்று மாம்பழங்களை வாங்குவதை விட நமக்கு தெரிந்த கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டு வரும் வியாபாரிகளிடம் அவற்றை வாங்கும்போது ஓரளவிற்கு ரசாயனம் கலக்காத பழங்களை வாங்க முடியும். மேலும் அரசு ரசாயனம் கலந்த மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நம்பிக்கை கேள்விக்குறி

தா.பழூரை சேர்ந்த செந்தில்குமார்:- பழங்கள் ஆரோக்கியம் தரும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்களை தேடிப்பிடித்து வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்கு பல்வேறு வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். வயிற்றுக்கு உணவு கொடுக்கும் அனைவருமே கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகின்றனர். ஆனால் சில வியாபாரிகளின் அதிகப்படியான பேராசை காரணமாக காய்களை பழங்களாக மாற்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்துகின்றனர். இது உணவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய அனைவர் மீதும் மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை நாளுக்கு நாள் கேள்விக்குறியாக்கி வருகிறது. இயற்கைக்கு மாறாக உற்பத்தி செய்யப்படும் எந்த உணவு பொருளும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது. எனவே விவசாயிகள் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறார்களோ, அதே அர்ப்பணிப்பு உணர்வோடு வியாபாரிகளும் விற்க வேண்டும். பழங்களை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கும், எது சரியான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழம் என்பதை கண்டறிந்து வாங்கும் ஆற்றல் தேவைப்படுகிறது.

நோய்கள் ஏற்படும்

கீழுப்பழுவூர் அருகே செம்பியக்குடியை சேர்ந்த மண்ணியல் நிபுணர் சிவரஞ்சனி:- செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில், அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புண்டு. கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவையும் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. கோடை காலங்களில் மாம்பழம் சாப்பிட்டதால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். அதற்கு காரணம் இதுபோன்ற ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மாம்பழங்களை வாங்கும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

செயற்கை முறைக்கு இடமில்லை

சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனை தொழிலாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் பழைய பஸ் நிலைய கிளை தலைவர் பாரதி:- தற்போது மாம்பழ சீசன் களை கட்ட தொடங்கி விட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து செந்தூரம், பங்கனப்பள்ளி, கல்லாங்கண்ணி ஆகிய மாம்பழ வகைகள் கடைகளுக்கு விற்பனைக்காக அதிகமாக வருகிறது. செந்தூரம், கல்லாங்கண்ணி ஆகிய மாம்பழ வகைகள் கிேலா தலா ரூ.80-க்கும், பங்கனப்பள்ளி மாம்பழ வகைகள் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம். பொதுமக்களும் மாம்பழங்களை அதிகமாக வாங்கி செல்கின்றனர். இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. செயற்கை முறைக்கு இங்கு இடமில்லை. அவ்வாறு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருக்கும் என்பதால் வைகாசி மாதம் முழுவதும் மாம்பழம் சீசன் இருக்குமா? என்பது கேள்விக்குறி.

உடனடி நடவடிக்கை

உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை முறையில் பழுக்க வைத்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டால், அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்து அழிப்பதோடு மட்டுமின்றி, அந்த கடைகளுக்கு சீல் வைத்து, கடையின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். மேலும் இது தொடர்பாகவும், உணவு பொருட்களில் கலப்படம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரம்பலூருக்கு வாகனம் வரவுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்றார்.

1 More update

Next Story