திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள்


திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீசன் தொடங்கியதால் திருவாரூருக்கு மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

திருவாரூர்


சீசன் தொடங்கியதால் திருவாரூருக்கு மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மங்குஸ்தான் பழம்

நீலகிரியில், மங்குஸ்தான், ரம்புட்டான், பிளம்ஸ், பீச், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. மேலும் கூடலூர், கல்லாறு மற்றும் குற்றாலம், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மங்குஸ்தான் பழம் விளைவிக்கப்படுகிறது.

மங்குஸ்தான் பழம் பழங்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. மரங்களில் கொத்து கொத்தாக காய்க்கும் இந்த பழங்கள் நன்கு பழுத்தவுடன் மேல்பகுதி ஓடு கடினத்தன்மையை இழந்துவிடும். ஓட்டை பிரித்தால் உட்புறம் சிறிது புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர்.

மருத்துவ குணம் கொண்டது

இந்த மங்குஸ்தான் பழம் மருத்துவ குணமும் கொண்டது. மிருதுவான முட்களுடன், உருண்டை வடிவில் ரப்பர் பொம்மை போல் காணப்படுவது ரம்புட்டான் பழம். இந்த பழத்தை விரல்களால் அழுத்தி உடைத்தால், உள்ளே வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிறத்துடன் நுங்கு போன்று வழுவழுப்பாக இருக்கும் சுளையை சுவைக்கலாம்.

இந்த பழத்தின் மரம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை. தற்போது தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மலை பகுதிகளில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பழங்கள் பழக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த பழம் 1 கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்

கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து இப்பழங்கள் குமரி மாவட்டத்திற்கு விற்பனைக்கு வருகின்றன. பின்னா் அங்கிருந்து வியாபாரிகள் மூலம் திருவாரூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். திருவாரூரில் மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்களை கடைவீதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

சீசன் காலம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மங்குஸ்தான், ரம்புட்டான் பிளம்ஸ் போன்ற பழங்களை பாா்க்க வேண்டுமானால் கோவை, திருப்பூர், தென்காசி, குற்றாலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சீசன் காலங்களில் சென்றால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் போக்குவரத்து வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் ஆர்வத்தினால் அவை எங்கள் பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

குழந்தைகளை பொருத்தவரையில் மங்குஸ்தான், ரம்புட்டான், பிளம்ஸ் உள்ளிட்ட பழங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதுடன் பெற்றோரிடம் அடம் பிடித்து வாங்கி செல்கின்றனர் என்றனர்.


Next Story