குமரியில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது;கிலோ ரூ.260 வரை விற்பனை


குமரியில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது;கிலோ ரூ.260 வரை விற்பனை
x

குமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது. இந்த பழங்கள் கிலோ ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது. இந்த பழங்கள் கிலோ ரூ.260 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பழங்களின் அரசி

மங்குஸ்தான் பழம் பழங்களின் அரசி என வர்ணிக்கப்படுகிறது. இவை உருண்டை வடிவில் தண்டுப்பகுதியில் சிறு, சிறு இதழ்களுடன் காணப்படும். இந்த வகை பழங்கள் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் விளைகின்றன.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, ஆலஞ்சோலை, களியல், நெட்டா, மாறாமலை, வேளிமலை உள்ளிட்ட இடங்களில் தனியார் தோட்டங்களில் மங்குஸ்தான் பழ மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

சீசன் தொடங்கியது

மங்குஸ்தான் பழங்களின் சீசன் காலங்கள் மே மற்றும் ஜூன் மாதங்கள் ஆகும். மரங்களில் கொத்து கொத்தாக காய்க்கும் இந்த பழங்கள் பழுத்தவுடன் இவற்றின் மேல்பகுதி தோடு கடினத்தன்மையை இழந்து விடும். தோட்டை உடைத்தால் சிறிது புளிப்பு கலந்த இனிப்புடன் சுவை மிகுந்த பழச்சுளைகள் இருக்கும்.

ஒரு பழத்தில் பெரும்பாலும் 6 சுளைகள் வரை இருக்கும். இதில் ஒரு சுளையில் மட்டும் விதை இருக்கும். பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட இந்த பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

கிலோ ரூ.260 வரை விற்பனை

குமரி மாவட்டத்தில் இந்த பழங்கள் பழக்கடைகளில் விற்பனைக்கு வருகின்றன. இதில் உள்ளூர் பழங்களுடன், குற்றாலம் மற்றும் கேரளாவில் இருந்தும் பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் உள்ளூர் பழங்கள் கிலோவுக்கு ரூ.240-க்கும், வெளியூரில் இருந்து வரும் பழங்கள் கிலோ ரூ.260-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து குலசேகரத்தை சேர்ந்த வியாபாரி தங்கராஜ் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை மையமாகக் கொண்ட பகுதிகளில் மங்குஸ்தான் பழ மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழ மரங்களை மொத்தமாக விலை பேசி பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம், என்றார்.

1 More update

Next Story