மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது
கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு மங்குஸ்தான் பழங்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம்
கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு மங்குஸ்தான் பழங்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.
கல்லாறு பண்ணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 360 மீட்டர் உயரத்தில் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை உள்ளது.
1900-ம்ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பண்ணை 8.92 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது.
இங்கு மலேசியாவை தாயகமாக கொண்ட பழங்களின் அரசி என வர்ணிக்கப்படும் மங்குஸ்தான் பழம், துரியன், லிச்சி, லாங் சாட், ரம்புட்டான், வெல்வெட் ஆப்பிள் ஆகிய பழ மரங்கள் உள்ளன.
எலுமிச்சை, கொய்யா, பலா, பப்ளிமாஸ், பன்னீர், கொய்யா மற்றும் கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, மிளகு, பிரியாணி இலை உள்ளிட்ட வாசனை திரவியங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மங்குஸ்தான் பழ சீசன்
தற்போது கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ் தான் பழ சீசன் தொடங்கி உள்ளது. இங்கு 202 மங்குஸ்தான் பழ மரங்கள் உள்ளன. அதில் 180 மரங்களில் மங்குஸ்தான் காய்த்து கனிய தொடங்கி உள்ளன.
கடந்த ஆண்டுகளில் டெண்டர் மூலமாக மங்குஸ்தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் அரசே நேரடியாக மங்குஸ் தான் பழங்களை விற்பனை செய்து வருகிறது.
இதற்காக மங்குஸ் தான் பழங்களை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மங்குஸ்தான் ஒரு கிலோ ரூ.320 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர்.
நாற்று உற்பத்தி
இது குறித்து அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் மோகன்ராம் கூறியதாவது:-
கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் தற்போது மங்குஸ்தான் பழசீசன் தொடங்கி உள்ளது. இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு வரை நீடிக்கும். மங்குஸ்தான் பழம் மருத்துவ குணம் கொண்டது.
குளுக்கோஸ் மற்றும் வைட்டமின் பி1, பி2, ஆகிய வைட்டமின்கள் உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் பண்ணையில் நேரடியாக பண்ணை விலைக்கே மங்குஸ்தான் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரும் ஆண்டுகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மங்குஸ்தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.