மணிமுத்தாறு அணை 2-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும்; கலெக்டரிடம், விவசாயிகள் மனு
கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற மணிமுத்தாறு அணை 2-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற மணிமுத்தாறு அணை 2-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
மணிமுத்தாறு பிரதான கால்வாய் 2-வது ரீச் பிரிவு விவசாயிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், ''எங்கள் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைநீரை கொண்டு விவசாயம் செய்தோம். தற்போது அந்த பயிர்களில் நெற்கதிர்கள் வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு மணிமுத்தாறு அணையில் குறைந்தளவு மட்டுமே தண்ணீர் உள்ள காரணத்தினால் 3, 4-வது ரீச்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு உத்தரவுப்படி நீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் முறை வைத்து தண்ணீர் பாய்த்து கொண்டிருக்கிறார்கள். கருணை அடிப்படையில் அணையில் இருக்கின்ற தண்ணீரை 100 மில்லியன் கன அடி மட்டும் 2-வது ரீச்சில் எங்கள் பகுதி மடைகளில் திறந்து, மடை அருகில் உள்ள கருகும் நெற்பயிர்களை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பச்சையாறு அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
கருப்பு துணி கட்டி மனு
தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் தலைமையில், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு அளித்தனர்.
அதில், ''ராம்குமார் சிறை படுகொலை வழக்கை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி ராமராஜ் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் பாதுகாப்பு சங்க நெல்லை மாவட்ட தலைவர் அமூஸ் முருகன் கொடுத்த மனுவில், ''நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள வெளிமதில் சுவரை ஒட்டி ஏராளமான தனியார் கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளை அப்புறப்படுத்தி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவர் போன்று மாற்ற வேண்டும். இதன் மூலம் கோவிலின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வெளியே உள்ள கழிவுநீர் தொட்டிக்கு மூடி போட்டு பாதுகாக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்க தலைவர் முகமது அய்யூப் மனு கொடுத்தார்.
தர்ணா போராட்டம்
நாங்குநேரி அருகே கல்லடி சிதம்பராபுரம் வேதநாயகபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, தங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடந்து வருகிறது. ஒருவர் முள்வேலி அமைத்துள்ளார். அதனை உடனே அகற்றி தர வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.