மணிப்பூர் விவகாரம்: பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை - நிர்மலா சீதாராமன்


மணிப்பூர் விவகாரம்: பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

“மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்துதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அருங்காட்சியகம்

இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தம் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஆதிச்சநல்லூர். இது 3,500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் ெதாடங்கி உள்ளது. இந்த பணியை விரைவில் முடிப்போம்.

தமிழக அரசு கீழடியில் மிகச்சிறப்பான முறையில் பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பழமையான கோவில் சிலைகளை மீண்டும் ெகாண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எல்லாம் உங்கள் நாட்டில் உள்ள எங்கள் ஊரின் பழமையான பொருட்களை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

மணிப்பூர் விவகாரம்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச அரசு தயாராக உள்ளது. உள்துறை மந்திரி அமித்ஷாவும் தயாராக இருக்கிறார். மணிப்பூரில் இது முதல் தடவை இல்லை. பலமுறை இப்படி நடந்து உள்ளது. இங்கு அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அரசியல் செய்வதால் நானும் அரசியல் பேசுகிறேன்.

கடந்த 2013-ம் ஆண்டு மணிப்பூரில் முழுமையான முடக்கம் ஏற்பட்டது. மருந்துகள், கியாஸ் சிலிண்டர்கள் உள்பட எந்த ஒரு பொருட்களும் அங்குள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை மந்திரி கூட அங்கு செல்லவில்லை.

சபையை நடத்தும் பொறுப்பு

ஆனால், இப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூரில் 3 நாட்கள் இருந்து ஒவ்வொரு முகாம்களாக சென்று அங்குள்ள நிலைமைகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சிகளும் மணிப்பூருக்கு நேரில் சென்று வந்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு சென்று வந்ததற்கான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட உள்துறை மந்திரியிடம் தெரிவித்தால் கூட அதற்கான விடை கிடைக்கும். ஆனால் அவர்கள் அங்கு என்ன நடந்தது என்று குறித்து பேசவில்லை.

நாடாளுமன்றத்தில் சபையை நடத்தும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. சபையை நடத்துவதற்கு பொதுவாக சபாநாயகரும் உள்ளார். எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

விதி இல்லை

மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை மந்திரி பதில் சொல்ல தயாராக இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் தான். ஆனால், எதிர்க்கட்சிகள் அங்கு வந்து விவாதிக்காமல் எங்கேயோ பேசி வருகிறார்கள். பிரதமர் வந்துதான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள். அப்படி ஒரு விதி இல்லை.

எதிர்க்கட்சிகள் கபடி விளையாட்டு போன்று எதிர் அணியும் நாங்கள் தான், ஆடும் அணியும் நாங்கள்தான், நடுவரும் நாங்கள் என்பது போல் செயல்படுகிறார்கள். நீங்கள் அவர்களை கேட்க வேண்டும். இப்படியா நாடாளுமன்றத்தை நடத்த வேண்டும் என்று. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story