மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு


மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
x

மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

மதுரை,

மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மணிப்பூர் மாநிலத்தில், பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டு, ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனை கண்டிப்பதோடு கடந்து சென்று விட முடியாது. எதிர்ப்புகளை பலமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் 2-வது கட்டமாக இந்த போராட்டம் நடக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்போம் என்ற வாக்குறுதி அளித்து தான் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக மதத்தின் பெயரால் 2 சமூகத்தை பிளவுபடுத்தி விட்டார்கள். பா.ஜ.க. அங்கு செல்லாதவரை இரு சமூக மக்களிடையே சமூக நல்லிணக்கம் இருந்தது. தற்போது அதனை சீர்குலைத்து விட்டார்கள்.

யார் காரணம்?

மணிப்பூரில் நிகழும் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழகத்திலும் இதே போன்ற நிலைமை ஏற்படும். மணிப்பூரில் நடந்த கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது. மோடியும், அமித்ஷாவும் பதவி விலக வேண்டும். அந்த மாநில முதல்-மந்திரியும் பதவி விலக வேண்டும். அவர்கள்தான் இந்த கலவரத்திற்கு காரணம். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் கட்சியாக பா.ஜ.க. மாறி விட்டது. அவர்கள், ஓட்டுக்காக கூட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாரா?. பா.ஜ.க.வை விமர்சிப்பது எங்களுடைய அரசியல் நோக்கம் கிடையாது. சமூக உணர்வோடு அம்பலப்படுத்துகிறோம். வி.சி.க. சிறிய கட்சி தான், ஆனால் கொள்கையில் இமாலயம் போல உறுதியானவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story