பள்ளி-கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது


பள்ளி-கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:46 PM GMT)

சுற்றுப்புறங்கள், வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் பள்ளி-கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மஞ்சப்பை விருது

''மீண்டும் மஞ்சப்பை" பிரசாரத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய tnpcb.gov.in இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட 2 பிரதிகள் மற்றும் 2 குறுவட்டு (சி.டி.) பிரதிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம்(மே) 1-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story