பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க வேண்டும்
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம் சார்பில் சேலம் மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் ரோட்டரி ஹாலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கணபதி, பொருளாளர் கண்ணன், மாநில இளைஞரணி தலைவர் பழனி, வி.எஸ்.செல்வமாளிகை மாணிக்கம், மாவட்ட உயர்மட்ட குழு பொறுப்பாளர் என்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதும் சுமார் 40 லட்சம் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது தொழில் மூலம் மேம்பாடு அடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை பெய்யும் காலங்களில் மண்டபாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மண் பானையும் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.