இந்துமுன்னணி பிரமுகர் மீது பல வழக்குகள்
இந்துமுன்னணி பிரமுகர் மீது பல வழக்குகள்
கோவை
துப்பாக்கிகளை பதுக்கி வைத்து கைதான இந்து முன்னணி பிரமுகர் அயோத்தி ரவி மீது கொலை முயற்சி, அடிதடிமோதல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்து முன்னணி பிரமுகர் கைது
கோவையில் துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் கோவை புலியகுளத்தில் உள்ள இந்து முன்னணி பிரமுகர் அயோத்திரவி என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 2 கைத்துப்பாக்கிகள், 5 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அயோத்தி ரவியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
துப்பாக்கி குறித்து விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது. அவரது கூட்டாளிகளிடம் துப்பாக்கிகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டது. 5 தோட்டாக்கள் தவிர அந்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் மேலும் 15 தோட்டாக்கள் உள்ளதா? என்றும் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. கைதான அயோத்தி ரவி கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் பல வழக்குகள்
அயோத்தி ரவி மீது உள்ள வழக்குகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் கஞ்சா கடத்தல், அடி-தடி மோதல் உள்ளிட்ட 10-க்கும் மேலான குற்ற வழக்குகளும், அரசியல் போராட்டங்கள் தொடர்பாக 10-க்கும் மேலான வழக்குகளும் உள்ளன. கோவையில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்து இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.