ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்,
கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2-ந் தேதி) குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நேற்று முன்தினம் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்தனர். சிலுவையில் அறையப்பட்ட தினத்தில் இருந்து 3-வது நாளான உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
அந்த வகையில் விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியாவில் இருந்து அருட்தந்தை தனம் கலந்து கொண்டார். தொடர்ந்து பங்குதந்தை பால்ராஜ்குமார் தலைமையில் கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது. அப்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி
ஈஸ்டர் பண்டிகையையொட்டி பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பங்குதந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து மெழுகுவர்த்தி கையில் ஏந்தி கொண்டு கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவிலில் உள்ள தூய சிலுவை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் சபை குரு தலைவர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்,