கடன் செயலியால் பலர் தற்கொலை செய்த விவகாரம்:சீன நிறுவன இயக்குனராக பணியாற்றிய விருதுநகர் வாலிபர் கைது
கடன் செயலியை அறிமுகப்படுத்தி பலரை தற்கொலைக்கு தூண்டிய சீன நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபரை ஒடிசா போலீசார் கைது செய்தனர்.
கடன் செயலியை அறிமுகப்படுத்தி பலரை தற்கொலைக்கு தூண்டிய சீன நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபரை ஒடிசா போலீசார் கைது செய்தனர்.
சீன போலி நிறுவனங்கள்
கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் இருந்து குவான்ஹூவாவாங் என்பவர் பெங்களூரு வந்தார். இவருடன் ஒரு பெண்ணும், ஆணும் வந்தனர். இவர்கள் அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து, 3 போலி நிறுவனங்களை உருவாக்கினர். அந்த நிறுவனங்கள் கடன் செயலிகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன. இதை நம்பி அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திய பலர், பல்வேறு பண நெருக்கடிகளுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து அந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.
இதனால் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் வெவ்வேறு செயலிகளை சீன போலி நிறுவனங்கள் உருவாக்கி, ஆன்லைனில் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்தன. அந்த செயலிகள் மீது நடவடிக்கை எடுக்காதவாறு புதிய மென்பொருளை சீனாவில் தயாரித்து, அதை இந்தியாவில் அமல்படுத்தினர்.
விருதுநகர் வாலிபர் கைது
கடன் செயலிகள் மூலம் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஒடிசா மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது சீன போலி நிறுவனம் ஒன்றில் இயக்குனராக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்த சித்ரவேல்(வயது 25) இருந்தது தெரியவந்தது. கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் புகைப்படங்கள், அவர்களுடைய உறவினர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சித்ரவேல் தான் மேற்பார்வையிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். தற்போது அவர் ஆவியூரில் பதுங்கி இருப்பதை அறிந்த ஒடிசா போலீசார், உடனடியாக தமிழகம் வந்தனர். நேற்று முன்தினம் ஆவியூரில் பதுங்கியிருந்த சித்ரவேலை ஒடிசா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஒடிசா மாநிலம் கட்டாக் நகர கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சித்ரவேல் எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பெங்களூரு சென்றுள்ளார். அங்கேயே தங்கி பணியாற்றி வந்ததாகவும் தெரியவருகிறது.
போலீசார் தகவல்
இந்தியாவில் மோசடியாக பணத்தை சம்பாதித்து சீனாவுக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இந்த கும்பல் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், சீன மென்பொருள் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மோசடியாக சம்பாதித்த பணத்தை துபாயில் இருந்து எடுத்துள்ளனர் என்றும், குறிப்பிட்ட தொகையை கிரிப்டோ மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் சார்பிலும் கையாளப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.