இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா
இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி மாற நாயனார் மடம் மற்றும் கோவிலில் ஆண்டுதோறும் மகம் நட்சத்திர நாளில் 63 நாயன்மார்களில் ஒருவரான மாற நாயனார் தம்பதியினர் முக்தி அடைந்த நாளில் குருபூஜை விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இளையான்குடி பகுதி வாழ் சிவனடியார்கள் இந்நாளில் மாற நாயனார்-புனிதவதி அம்மையாருக்கு சிறப்பு பூஜை செய்து அன்னதானம் படைத்து வழிபடுவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி ஞானாம்பிகை உடைய ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மாற நாயனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து சிவனடியார்களுக்கு மாற நாயனார் அடியார் திருக்கூடம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் திருமுறை திருப்பதிக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி முருகேசன், சிவபாலன் மற்றும் சிவனடியார்கள் செய்திருந்தார்கள்.